குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது தாத்தாவான சவ்ஜி படேலின் வீட்டைச் சுத்தம் செய்தபோது, எதிர்பாராத விதமாக குப்பைத்தொட்டிக்குள் ₹2.5 கோடி மதிப்புள்ள பங்குச் சான்றிதழ்களைக் (Share Certificates) கண்டெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சான்றிதழ்கள் அனைத்தும் அவரது மறைந்த தாத்தாவிற்குச் சொந்தமானவை. அந்த இளைஞர், அந்தப் பங்குகளைத் தன்னிடம்தான் இருக்குமாறு தாத்தா சவ்ஜி படேல் இறப்பதற்கு முன் கூறியதாகக் கூறி, அவை தனக்கே சொந்தம் என்று உரிமை கோரினார்.
ஆனால், அந்த இளைஞரின் தந்தையும் (அதாவது, சவ்ஜி படேலின் மகனும்) அந்தப் பங்குகள் தங்களுக்கே சேர வேண்டும் என்று உரிமை கோரினார். தாத்தாவின் நேரடி வாரிசு என்ற அடிப்படையில் அந்தப் பங்குகள் தமக்கே உரிமையானது என்று அவர் வலியுறுத்தினார். இதனால், தாத்தாவின் ₹2.5 கோடி மதிப்புள்ள சொத்துக்காக தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்தச் சொத்துரிமை தகராறு நீதிமன்றத்தை எட்டிய நிலையில், பங்குகளின் உரிமை யாருக்குச் சொந்தம் என்பதை குஜராத் உயர் நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கு நவம்பர் 3-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
