புனே நகரில் சமீபத்தில் நடந்த ஒரு வினோதமான மற்றும் ஆச்சரியமான சைபர் மோசடி சம்பவம் பெரும் பரபரப்பையும், எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. புனேவைச் சேர்ந்த 44 வயது ஒப்பந்ததாரர் ஒருவர், சமூக ஊடகங்களில் “பிரெக்னன்ட் ஜாப்” (Pregnant Job) என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்துள்ளார். பெண்களை கர்ப்பமாக்கும் ஆண்களுக்கு ₹25 லட்சம் பரிசு என்ற வாக்குறுதி கொண்ட அந்த விளம்பரத்தின் எண்ணுக்கு அழைத்தபோது, ஒரு உதவியாளர் பேசி, “வேலைக்காக முன்பதிவு, அடையாள அட்டை, சோதனைகள்” எனப் பல்வேறு காரணங்களைக் கூறி கட்டணம் செலுத்த வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் சிறிய தொகையாகக் கேட்கப்பட்டாலும், மூன்று வாரங்களுக்குள் சுமார் 100க்கும் அதிகமான டிஜிட்டல் பரிமாற்றங்கள் (UPI, IMPS) மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து மொத்தம் ₹11 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பதிவு கட்டணம், கே.வை.சி., ஜி.எஸ்.டி., டி.டி.எஸ்., பரிசோதனைச் செலவு எனப் பல பெயர்களில் பணம் பறிக்கப்பட்டுள்ளது.

பணம் அனுப்பிய பிறகு, மேல் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, மோசடி கும்பல் அழைப்பைத் துண்டித்து பிளாக் செய்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தக் கும்பல், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதே “பிரெக்னன்ட் ஜாப்” மாதிரியைப் பயன்படுத்தி ஆண்களை ஏமாற்றுவது அம்பலமாகியுள்ளது. மேலும் நம்பகத்தன்மையற்ற விளம்பரங்கள் குறித்து மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டுமெனவும் , எந்த ஒரு “வேலைவாய்ப்பு” அல்லது “பரிசு”க்காகவும் “பதிவுக் கட்டணம்,” “அடையாள அட்டை கட்டணம்,” அல்லது “செயலாக்கக் கட்டணம்” போன்ற பெயர்களில் பணம் கேட்கப்பட்டால், அது பெரும்பாலும் மோசடியாக இருக்கவே வாய்ப்புள்ளது என்பதையும் இச்சம்பவம் சுட்டிக் காட்டுகிறது.