நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் களப் பணிகளைத் துரிதப்படுத்தும் விதமாக, அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரும் (SAC) அவருக்கு ஆதரவாகக் களமிறங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் விஜய்யால் அமைக்கப்பட்ட தவெகவின் புதிய நிர்வாகக் குழுவில், N.ஆனந்த் எதிர்ப்பாளர்கள் மூவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால், இந்தக் குழு நியமனம் விஜய்க்கு அவரது தந்தை பக்க பலமாகச் செயல்படுவதற்கான ஒரு முன்னெடுப்பாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

அரசியல் அனுபவம் வாய்ந்த எஸ்.ஏ. சந்திரசேகர், தமிழகத்தில் மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனத் தமிழகத்தின் மூன்று முன்னாள் முதல்வர்களுடன் நீண்டகாலம் அரசியல் ரீதியாகப் பயணம் செய்தவர் ஆவார். அரசியல் தளத்தில் அவருக்குள்ள இந்த விரிவான அனுபவமும், தொடர்புகளும், புதிதாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய்க்கு ஒரு மிகப் பெரிய பலமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தவெகவின் அடுத்தக்கட்ட நகர்வுகளில் எஸ்.ஏ.சி-யின் தாக்கம் கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.