ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியின் மாநில மருத்துவ அணிச் செயலாளரான டாக்டர் கிருத்திகா, இன்று (அக். 29) ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து விலகிய பிறகும்கூட, ஓபிஎஸ் தனது அடுத்தக்கட்ட அரசியல் முடிவு குறித்து எதுவும் பேசவில்லை. இந்தச் சூழ்நிலையில், அவரது செயல்பாடுகள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாகச் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்நிலையில், அவரது அணியைச் சேர்ந்த பலரும் அதிமுக, திமுக, பாஜக எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பிரதான கட்சிகளில் இணைந்து வருவது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே கூட்டணி குறித்துக் குழப்பம் நீடிக்கும் நிலையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் விலகிச் சென்று, வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்வது, அவரது அணிக்கு மேலும் சவாலான சூழலை உருவாக்கியுள்ளது. இந்த விலகல் குறித்த அதிகாரப்பூர்வமான விளக்கத்தை ஓபிஎஸ் தரப்பு இதுவரை அளிக்கவில்லை.