மகாராஷ்டிரா மாநிலம் பால்டனில் பணியாற்றிய பெண் மருத்துவர் டாக்டர் சம்படா முண்டே (வயது 30), கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி, ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தனது கடைசி கடிதத்தில், காவல் துணை ஆய்வாளர் கோபால் பட்னே தன்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும் காவல் அதிகாரி பிரசாந்த் பங்கர் மூலம் தொடர்ச்சியான மன ரீதியான மற்றும் உடல் ரீதியான சித்திரவாதத்திற்கு உள்ளானதாகவும் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். அவரது மரணம் மாநிலம் முழுவதும் மருத்துவ மற்றும் சமூக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வழக்கில் புதிய திருப்பமாக, பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றும் முயற்சிகள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்படா முண்டேவின் உறவினர்கள், அறிக்கையை மாற்ற பல அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
மேலும், ஒருவர் “MP” என குறித்திருந்த புள்ளி, அவரது பி.ஏ. வழியாக டாக்டரிடம் தொடர்பு கொண்டதாகவும், உரையாடல் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விபரங்கள் வழக்கில் அரசியல் பின்னணியையும், உயர்மட்டத் தலையீட்டையும் குறிக்கின்றன என சமூக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சம்பவத்தை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, விரிவான விசாரணைக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தற்போது போலீசார் முழுமையான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.
