மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில், ஒரு பெண் மருத்துவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஐந்து மாதங்களில் ஒரு போலீஸ் உதவி ஆய்வாளரால் (SI) நான்கு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட டாக்டர், தனது இடது உள்ளங்கையில் ஒரு தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்துள்ளார்.
அந்தக் குறிப்பில், SI கோபால் பாட்னே என்ற காவல்துறை அதிகாரிதான் தனது மரணத்திற்குக் காரணம் என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தன்னை பாலியல் வன்கொடுமை மற்றும் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், அவரது தொல்லையாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரஷாந்த் பாங்கர் என்ற மற்றொரு போலீஸ் அதிகாரி மீதும் மன உளைச்சல் கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த உடனேயே, குற்றம் சாட்டப்பட்ட கோபால் பாட்னே சஸ்பெண்ட் (Suspended) செய்யப்பட்டுள்ளார்.
ஃபல்டான் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இந்த டாக்டர், தற்கொலை செய்வதற்குப் பல மாதங்களுக்கு முன்பே, இதே அதிகாரிகளுக்கு எதிராக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அந்தக் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முந்தைய புகாரை அலட்சியம் செய்தவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
