சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ச்சியாக இரண்டு முறை டக் எடுத்தது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உள்ளூர் ஒருநாள் தொடரில் இடம்பிடிக்க வேண்டுமானால், இந்த கடைசி ஒருநாள் போட்டியில் அவர் கட்டாயம் சிறப்பாகச் செயல்பட வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.
முதல் போட்டியில் ஜோஷ் ஹேசில்வுட்டின் (Josh Hazlewood) ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே சென்ற அகலப் பந்தை விரட்டி அவுட்டானதும், இரண்டாவது போட்டியில் சேவியர் பார்ட்லெட்டின் (Xavier Bartlett) உள்ளே வந்த பந்தில் எல்.பி.டபிள்யூ (LBW) ஆனதும், கோலி தனது கெரியர் முழுவதும் சவால்களைச் சந்தித்த அதே பலவீனங்களை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக அடிலெய்டு போன்ற சாதகமான களத்திலும் அவர் தடுமாறியது, அவர் மீது அழுத்தம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
இதற்கிடையில், கோலியின் இரண்டாவது டக்-அவுட்டிற்குப் பிறகு, ஒரு ட்வீட் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியது. “நீங்கள் தோல்வியுறும் ஒரே நேரம், நீங்கள் விட்டுக் கொடுக்கும்போது மட்டும்தான்” என்ற விராட் கோலியின் முந்தைய பதிவுக்குப் பதிலாக, ‘I decided to give up’ (நான் விட்டுக் கொடுக்க முடிவு செய்துவிட்டேன்) என்று வந்த ஒரு பதில் ட்வீட் 1.6 மில்லியன் பார்வைகளுடன் வைரலானது.
I Decided To Give Up https://t.co/D0emaMbz0x
— Viral Kohli (@silenccer_) October 23, 2025
இதனால், கோலி ஓய்வு முடிவை அறிவித்துவிட்டாரோ என ரசிகர்கள் ஒரு கணம் பதறிப்போனார்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே அது உண்மையான விராட் கோலியின் கணக்கு அல்ல, மாறாக ‘வைரல் கோலி’ (VIRAL Kohli) என்ற மற்றொருவரின் கணக்கு என்று தெரிந்தவுடன், ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்த குழப்பம் சமூக வலைதளங்களில் வேடிக்கையான எதிர்வினைகளையும் நகைச்சுவைப் பதிவுகளையும் உருவாக்கியது.
