துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியை மூன்று முறை வீழ்த்தி இறுதிப்போட்டியையும் வென்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் மத்திய மந்திரியான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய அணி மறுத்ததாக தகவல்கள் வெளியாகின. பஹல்காம் விவகாரம் காரணமாக பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினர் என்பதும், அதனால் நக்வி கோப்பையை தனக்கே வைத்துக்கொண்டுப் போனார் என்பதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து, மோஷின் நக்வி ஆசிய கோப்பையை அபுதாபியில் ஒரு ரகசிய இடத்தில் வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அலுவலகத்திலிருந்து கோப்பை அகற்றப்பட்டுள்ளதாகவும், அது தற்போது நக்வியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் சமீபத்தில் கோப்பை குறித்து விசாரித்தபோது இது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மோஷின் நக்வி மீது அரசியல் நோக்கில் செயல்படுகிறார் என்ற கடும் விமர்சனங்களை எழும்பச் செய்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி இந்திய அணி கோப்பை வென்றும், ஏற்கனவே ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் கோப்பை இன்னும் இந்திய அணியிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது