டெல்லியின் நரேலா பகுதியில் ஐந்து வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை அவனது தந்தையின் வாகன ஓட்டுநர் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில், சிறுவன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனதாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த நரேலா தொழில்துறை பகுதி காவல்துறை, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.

இது தொடர்பான விசாரணையில், சிறுவனின் உடல், குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் நிதுவின் வாடகை அறையில் மறைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சிறுவன் செங்கல் மற்றும் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தது. போலீஸ் விசாரணையில், சிறுவனின் தந்தை ஒரு போக்குவரத்து வாகனத்தின் உரிமையாளர் என்றும், அவரிடம் நிது மற்றும் வாசிம் என இரண்டு ஓட்டுநர்கள் பணியாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. திங்கட்கிழமை மாலை, இருவரும் குடிபோதையில் சண்டையிட்டபோது நிது, வாசிமை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து வாகன உரிமையாளர் தலையிட்டு நிதுவை கண்டித்ததுடன் அறைந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த நிது பழிவாங்கும் நோக்கில் சிறுவனை கடத்திச் சென்று கொன்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். குற்றம் சாட்டப்பட்ட நிது தற்போது தலைமறைவாக உள்ளார். மேலும் அவரை கைது செய்ய சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி வடமேற்கு மண்டல துணைக் காவல் ஆணையர் (DCP) தெரிவித்தார்.