ஆந்திரா மாநிலம் துணி அருகே உள்ள ஜகந்நாதகிரி குருகுலப் பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு சிறுமி மீது திடீர் பாலியல் பலாத்காரம் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், தெலுங்குத் தேசம் கட்சியின் (TDP) உள்ளூர் நிர்வாகி தாட்டிகா நாராயணராவ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீஸ் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட நாராயணராவ், “நான் உன் தாத்தா உறவினர்” என கூறி சிறுமியிடம் நெருக்கம் காட்டி, அவளை பள்ளியிலிருந்து ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் சிறுமியை ஒரு தனிமையான இடத்துக்குக் கொண்டு சென்று துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது.

 

இதையடுத்து, ஒரு நபர் சந்தேகத்துடன் நாராயணராவை பின்தொடர்ந்து, மொபைல் மூலம் சம்பவத்தின் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த காட்சியில், சிறுமி உடை அணிந்து கொண்டிருக்கும் போதும், நாராயணராவிடம் “என்ன செய்தாய்?” என அவர் கேள்வி எழுப்பும் காட்சிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. நாராயணராவ் எந்த பதிலும் கூறாமல், “என்ன செய்ய விரும்புகிறாயோ செய்து கொள்” என்று கூறி சிறுமியுடன் பைக் மீது ஏறி அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட நாராயணராவ் இதற்கு முன்பும் பல முறை “உறவினர்” என்ற பெயரில் சிறுமியை ஹாஸ்டலிலிருந்து வெளியே அழைத்துச் சென்றதாக குருகுலப் பள்ளி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சிறுமியின் குடும்பத்தினர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தி, “இந்த வழக்கு நியாயமான முறையில் விசாரிக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். வழக்கை அரசியல் கோணத்தில் தவறாக சித்தரிக்கப்படுவதாக குற்றம் சாட்டி, குடும்பத்தினரும் போலீசாரும் இடையே சிறு வாக்குவாதமும் ஏற்பட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படும் என்று ரூரல் எஸ்.ஐ. உறுதியளித்தார். மேலும் சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் நாராயணராவை அடித்து தாக்கியுள்ளனர். அந்த வீடியோவும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.