தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று (அக்.22) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளனர்.

அதன்படி, சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்றைய தினம் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிலேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.