உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய முதலீட்டை செய்யவுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.32 லட்சம் கோடி) முதலீட்டில் ஏஐ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது என்று மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது, அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் நிறுவனம் இதுவரை செய்த மிகப்பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை வெடித்துள்ளது. “கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மதுரை மண்ணின் மைந்தர். அவரை அழைத்து வர முயன்றிருந்தால், இந்த 15 பில்லியன் டாலர் முதலீடு தமிழ்நாட்டிற்கே வந்திருக்கும். ஆனால் திமுக அரசு அந்த வாய்ப்பை இழந்துவிட்டது,” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த திமுக செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், “மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலும் பல பெரிய நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன. பாஜக அரசு இந்திய அளவில் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. இது அரசியல் விளையாட்டு,” என பதிலடி கொடுத்துள்ளார். இதேவேளை, இந்த செய்தியை ஆங்கில ஊடகம் பிளாஷ் செய்தியாக வெளியிட்டது. அதனை ஸ்கிரீன்‌ஷாட் எடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், “சுந்தர் பிச்சை ஆந்திராவை அல்ல, பாரத் (இந்தியாவை) தேர்வு செய்துள்ளார்!” என்று பதிவு செய்து பெரும் பேசுபொருளாகியுள்ளார்.