பிரான்சில் உள்ள புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் ஹாலிவுட் திரைப்படத்தை ஒத்த முறையில் நடந்த அதிர்ச்சி கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை  காலை 9:30 மணியளவில், மர்மநபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து, நெப்போலியனும் மகாராணியும் பயன்படுத்தியதாக கருதப்படும் விலைமதிப்பற்ற 9 கிரீட நகைகளை வெறும் 7 நிமிடங்களில் கொள்ளையடித்தனர்.

மின்சார கருவிகளும் நீட்டிக்கக்கூடிய ஏணியும் கொண்டு நுழைந்த அவர்கள், தங்க முலாம் பூசப்பட்ட கேலரிக்குள் புகுந்து, நகைகளை எடுத்தபோது, ஒரு ரத்தினக் கிரீடம் தவறவிட்டு விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த கிரீடம், அருங்காட்சியகத்துக்கு அருகிலேயே சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் லூவ்ரே அருங்காட்சியகம் முழுவதும் ஒரு நாளுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டது. ஆயுதமேந்திய காவலர்கள் பிரபல கண்ணாடிப் பிரமிடு நுழைவாயிலை சுற்றி ரோந்து சென்றனர். பரபரப்பைச் சூழ்நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர், “இது ஒரு ஹாலிவுட் படம் போல இருந்தது, நாங்கள் மறக்க முடியாத அனுபவம்” என கூறினார். இந்த கொள்ளை, சமீபத்தில் பிரான்சில் உள்ள அருங்காட்சியகங்களை குறிவைத்து நடக்கும் தொடர் கொள்ளைகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கொள்ளையர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன