கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடுரோட்டில் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், அரிவாளால் தாக்கி அவருடைய இரண்டு விரல்களை துண்டித்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த மாதம் நடந்தது. அந்தச் சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

போலீஸ் தரப்பில் கிடைத்த தகவல்படி, உஷா மற்றும் வரலட்சுமி எனும் இரண்டு பெண்கள் செப்டம்பர் 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பிரவீன் மற்றும் யோகானந்தா எனும் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, இருவரும் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளைப் பறிக்க முயன்றனர். இதில் பயந்த உஷா தன்னுடைய சங்கிலியை உடனே கொடுத்துவிட்டார். ஆனால் வரலட்சுமி எதிர்த்து நின்றபோது, யோகானந்தா அரிவாளால் அவரைத் தாக்கி அவரது கையின் இரண்டு விரல்களை வெட்டி துண்டித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கொள்ளையர்கள் சுமார் 55 கிராம் தங்க நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பல வாரங்களாக நடந்த தேடுதலுக்குப் பிறகு, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 74 கிராம் திருட்டுத் தங்க நகைகள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இருவருக்கும் ஏற்கனவே கொலை வழக்கு உட்பட பல குற்றப் பின்னணிகள் இருப்பதாகவும்,  விசாரணை நடைபெற்று வருவதாகவும் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் பெங்களூரில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பி உள்ளது.