கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஹொங்கனூரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டு வந்தவர் சிகூசா நாயகா என்ற அரசு ஊழியர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகிய அவர், இறுதியில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் சிகூசா நாயகா, “27 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை.
பலமுறை கேட்டும் எவரும் கவனிக்கவில்லை. உடல்நிலை சரியில்லாததால் ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்தேன். ஆனால் பஞ்சாயத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ரமி கவுடா மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவர் மோகன் குமார் ஆகியோர் அடிக்கடி துன்புறுத்தி வந்தனர்.
விடுமுறை கேட்டால் வேலையை யாரையாவது கொண்டு வா என்று கூறுவார்கள். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலகத்தில் இருக்கும்படி கட்டாயப்படுத்தினர்” என்றும் கூறியுள்ளார். அவரது தற்கொலை குறிப்பு தற்போது போலீசாரிடம் கிடைத்துள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிகூசா நாயகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பளம் வழங்காதது காரணமாக அரசு ஊழியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
