ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளின் படைகள் கடந்த சில நாட்களாக கடுமையாக மோதிய நிலையில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 48 மணி நேரத்துக்கு சண்டை நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணம் அருகே பாகிஸ்தான் வான்படை நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
அது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது: நட்புறவான போட்டியில் பங்கேற்க, கிழக்கு பக்டிகா மாகாணத்தின் உர்குனில் இருந்து ஷரானாவுக்கு வீரர்கள் சென்றிருந்தனர். பின்னர் உர்குனுக்கு திரும்பியபோது, அவர்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது கோழைத்தனமான செயல்,” என தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்க இருந்த முத்தரப்பு தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்த்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் காண் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. உலக அளவில் தங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற கனவு கொண்ட இளம் கிரிக்கெட் வீரர்கள், பெண்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களை குறிவைப்பது ஒழுக்ககேடானதும் காட்டுமிராண்டித்தனமானதும் ஆகும்.
இந்த அநீதியான, சட்டவிரோத செயல்கள் மனித உரிமைகளை மீறுவதாகும். பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகியுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் இந்த கடினமான நேரத்தில் நமது மக்களுடன் நிற்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
