பாலக்காடு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அர்ஜுன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வகுப்பு ஆசிரியை ஆஷாவும், முதல்வர் லிசியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் குற்றச்சாட்டுகளின்படி, ஆசிரியை ஆஷா, அர்ஜுனை சைபர் செல் மூலம் பயமுறுத்தியதாகவும், ஒரு வருடம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அர்ஜுன், பள்ளியை விட்டு வெளியேறும் முன் தனது நண்பரை கட்டிப்பிடித்து, “நான் இறந்துவிடுவேன், இனி நாம் சந்திக்க மாட்டோம்” என்று கதறி அழுததாக அவரது சக மாணவர் தெரிவித்தார்.
மேலும், அர்ஜுனின் பெற்றோர், ஆசிரியையின் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாகவே அவன் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், அர்ஜுன் உட்பட நான்கு மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பியதை ஒரு பெற்றோர் பள்ளிக்கு தெரிவித்ததை அடுத்து, பெற்றோர்கள் பள்ளிக்கு அழைக்கப்பட்டு மாணவர்கள் கண்டிக்கப்பட்டனர். பின்னர், ஆசிரியை ஆஷா இதே விவகாரத்தில் தலையிட்டு அர்ஜுனை மிரட்டியதாகவும், அவனது கையில் அடித்ததற்கான காயங்கள் இருந்ததாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், அர்ஜுனின் மரணத்திற்கு அவனது மாமா அடித்ததே காரணம் என்று கூறுமாறு ஆசிரியை மாணவர்களை மிரட்டியதாகவும் மற்றொரு மாணவர் வெளிப்படுத்தினார். “அர்ஜுனுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவனை கொடூரமாக கொன்றுவிட்டனர்” என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை நடந்ததாகவும், தற்போது பள்ளி நிர்வாகம் 10 நாட்களுக்கு ஆசிரியர்களை பணியிடைநீக்கம் செய்து, அரசு உத்தரவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
