ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் லட்சுமி (27) ஐதராபாத்தில் தனது கணவர் அனில் குமார் (30) உடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கேதன் கார்த்திகேயா, லாஸ்யத வள்ளி என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதில் மகனான கேதனுக்கு பேச்சு தெளிவாக வராததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கணவர் அனில் குமார், “மகனுக்கு பேச்சு வராதது ஜீன் பிரச்சினை தான் காரணம், அதற்கு நீயே காரணம்” என மனைவி சாய் லட்சுமியை மனரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மகனுக்கு பேசக் கற்றுக் கொடுப்பதற்காக பல மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார் சாய் லட்சுமி. ஆனால் கணவரின் நடத்தை மாற்றப்படாததால் தம்பதியர் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், கணவர் அனில் குமார் விஸாகப்பட்டினத்தில் உள்ள தன் சகோதரர் வீட்டிற்கு சென்றிருந்தபோது, சாய் லட்சுமி மன அழுத்தத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அந்த வேளையில், தன் பிள்ளைகள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், தலையணையை முகத்தில் அழுத்தி மூச்சுத் திணற வைத்து கொலை செய்தார். அதற்குப் பிறகு தானும் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சாய் லட்சுமி தற்கொலை செய்வதற்கு முன் தனது பெற்றோருக்கு ஒரு வீடியோ பதிவு செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், “அவர் ஒருபோதும் மாற மாட்டார்… மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுக்கிறேன்… நான் இல்லாதபோது என் குழந்தைகள் உயிரோடு இருப்பதற்கான அர்த்தமே இல்லை… என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, சாய் லட்சுமியின் தந்தை மாறைய்ய பாபு அளித்த புகாரின் பேரில், அனில் குமார் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மனஉளைச்சலான சம்பவம், ஐதராபாத்து முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
