சமூக வலைத்தளமான ரெடிட்டில் (Reddit) ஒரு பயனர் பகிர்ந்த தீபாவளிச் சுத்தம் பற்றிய கதை தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வீட்டைக் சுத்தம் செய்யும் வழக்கம் உள்ளது. அவ்வாறு சுத்தம் செய்தபோது, அவரது அம்மா ஒரு பழைய டி.டி.ஹெச் செட்-டாப் பாக்ஸுக்குள் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கண்டுபிடித்துள்ளார். எண்ணிப் பார்த்ததில், அது சுமார் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் என்றும், அந்தப் பணம் செல்லாததாக்கப்பட்ட காலங்களில் (Demonetisation) அவரது அப்பா மறைத்து வைத்திருக்கலாம் என்றும் அந்தப் பயனர் கூறியுள்ளார்.
திடீரெனக் கிடைத்த இந்த இரண்டு லட்சம் ரூபாய் ஆரம்பத்தில் அந்தக் குடும்பத்துக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் போலத் தோன்றியது. ஆனால், மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே ஏமாற்றமாக மாறியது. அந்தப் பணக்கட்டுகள் முழுவதும் இரண்டாயிரம் ரூபாய் (₹2,000) நோட்டுகளாக இருந்தன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த ₹2,000 நோட்டுகளைச் சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்து, அவற்றைப் பரிமாற்றம் செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்தக் குடும்பம் இந்தப் பணத்தைக் கண்டுபிடித்தபோது அந்தக் காலக்கெடு முடிந்துவிட்டிருந்தது.

இதனால், இப்போது அந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்திற்குச் சில்லறை மதிப்பு மட்டுமே உள்ளது. இந்த வேடிக்கையான சோகமான கண்டுபிடிப்பு குறித்து தன் தந்தையிடம் இன்னும் சொல்லவில்லை என்றும், அவரது எதிர்வினை எப்படி இருக்குமோ என்று பயப்படுவதாகவும் அந்த ரெடிட் பயனர் எழுதியுள்ளார். மேலும், இந்தப் பணத்தை இனி என்ன செய்வது என்று பிற பயனர்களிடம் யோசனை கேட்டுள்ளார். ஒரு பயனர், “இது செல்லாததாக்கப்படவில்லை, புழக்கத்தில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. அதனால், நீங்கள் ரிசர்வ் வங்கியில் அறிவிப்புப் படிவத்தை நிரப்பி மாற்றலாம். ஆனால், ஒரே நேரத்தில் ₹2 லட்சம் மாற்றாமல், சின்னச் சின்னப் பகுதிகளாக மாற்றுங்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
