கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில், மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர நிர்வாகி பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தலைமறைவாகினர். இவர்களை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான (CBI) சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, தலைமறைவில் இருந்த புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் நேற்று வெளிவந்தனர். வெளியே வந்த உடனே, நிர்மல் குமார் முதலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், புஸ்சி ஆனந்தும் விஜய்யை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இதைத் தொடர்ந்து புஸ்சி ஆனந்த் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
