நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த டிரைவர் காளிமுத்து (27) மற்றும் அவரது மனைவி சினேகா (24) ஆகியோருக்கு 5 வயது  மகன், 3 வயது மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணமான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தைகளின் கல்விக்காக காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள மூன்றாவது மைல் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் சமீபத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

நாமகிரிப்பேட்டை அருகே கப்பலூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது டிரைவரான அஜித், தனது சித்தி தீபாவின் வீட்டிற்கு வந்தபோது சினேகாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் இருவரும் வீட்டை விட்டு ஓடினர். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதும், இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பிய போலீஸார், சினேகாவை அவரது கணவரின் தங்கை பரிமளாவின் வீட்டில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், காளிமுத்து தனது மனைவி சினேகா மற்றும் குடும்பத்தினருடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று, அதிகாலை 1 மணிக்கு முள்ளுக்குறிச்சியில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு திரும்பினர். இரண்டு மணிக்கு சினேகாவின் மாமியார் ஜானகி (44) வந்து பார்த்தபோது அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

மீண்டும் நாற்பது நிமிடங்கள் கழித்து வந்து பார்த்தபோது, சினேகா தனது தாலி கொடியை கழற்றி வைத்துவிட்டு மாயமாகியிருந்தார். அதேநேரம், ராசிபுரம் அருகே உள்ள காட்டில் சினேகா மற்றும் அஜித் இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக அறியப்பட்டது.

பூ பறிக்கச் சென்ற அஜித்தின் தந்தை கந்தசாமி, தனது மகனுடன் அருகில் ஒரு பெண் (சினேகா) விஷம் குடித்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தார். உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிருக்காக போராடி வருகின்றனர்.