சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அகில இந்திய இந்து மகாசபா தலைவரான ஸ்ரீகந்தன் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடம்பாக்கம் புலியூரைச் சேர்ந்த ஒரு பெண், ஸ்ரீகந்தன் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார். அவர் தனது சகோதரியின் மகளை அடிக்கடி ஸ்ரீகந்தன் வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுமியை கானத்தூரில் உள்ள ஸ்ரீகந்தனின் மற்றொரு வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, சிறுமிக்கு ஸ்ரீகந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவரத்தை சிறுமி சமீபத்தில் வேலூரில் வசிக்கும் தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த தாய் சம்பந்தப்பட்ட போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீகந்தனையும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் சிறுமியின் அத்தையையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
