ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் சன்ஹொ கிராமத்தைச் சேர்ந்த ராம்பாலி, தனது முதல் மனைவி வாரணாசியில் வசிக்க, இரண்டாவது மனைவி சம்பாவுடன் ராஞ்சியில் வாழ்ந்து வந்தார். சில மாதங்களாக ராம்பாலி மாயமாகி காணாமல் போன நிலையில், அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணை நடத்திய போலீசாருக்கு, சம்பாவின் நடமாட்டத்தில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மனதை உலுக்கிய வாக்குமூலம் வெளியாகி, சம்பா தான் கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்து உடலை புதைத்ததாக ஒப்புக்கொண்டார்.

இதற்கு காரணம், ராம்பாலி, தன் சொத்துகளை விற்று அந்த பணத்தை வாரணாசியில் உள்ள முதல் மனைவிக்கு வழங்கியதை அறிந்த சம்பா, கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பின்னர் அவரை கொல்ல தீர்மானித்ததாகவும் கூறியுள்ளார்.

தனது உறவினரான விஷ்ணுவுடன் சேர்ந்து திட்டமிட்டு, நான்கு பேரைக் கொண்டு ராம்பாலியை கொலை செய்த பின்னர், அவரது உடலை  புதைத்துள்ளனர். சம்பா, விஷ்ணு உள்ளிட்ட நால்வரையும் கைது செய்த போலீசார், தற்போது அவர்களிடம் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புதைக்கப்பட்ட நிலையில் ராம்பாலியின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்கை விரிவாக விசாரித்து வருகின்றனர்.