கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாநில முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பசுமை பட்டாசுகள் தவிர பிற வகை பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பு மற்றும் பருவமழையினால் ஏற்படும் மாசு பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் தீபாவளி தினங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நேரத்திற்குப் பிறகு அல்லது முன் எந்தவித பட்டாசுகளையும் வெடிக்க முடியாது என்றும், இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனை முன்னிறுத்தி, இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதால், மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.