திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வழியாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் தங்கி வந்தார். அவருடன் நட்பாக பழகிய ராகுல், “நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்; உன்னை நன்றாக பார்த்துக்கொள்கிறேன்” என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதில் மாணவி, “நாம் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; உங்கள் வீட்டார் சம்மதிப்பார்களா?” எனக் கேட்டபோது, “அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என உறுதியளித்ததாக தெரிகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, ராகுல் மாணவியை வைகை அணைக்கு வரவழைத்துள்ளார். அங்கு பூங்காவை சுற்றிப்பார்த்தபின், மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே நேரத்தில் மாணவியின் நிர்வாண காட்சியை மொபைலில் பதிவு செய்தார்.
பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டிய அவர், மாணவியிடம் தொடர்ந்து உறவு வைத்துக் கொண்டதாகவும், பின்னர் திருமணத்துக்கான மாணவியின் கோரிக்கையை நிராகரித்து தட்டிக் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலடைந்த மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து திருமண வாக்குறுதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட ஜோஸ் மரிய ராகுல் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.
