தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாயும் காயம் அடைந்தவருக்கு இரண்டு லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது கட்சி நிர்வாகிகளிடம் உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நிர்வாகிகள் வங்கி விவரங்களை சேகரித்து வருவதாகவும் விரைவில் நிவாரண உதவியை விஜய் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய விஜய் பொதுமக்களுக்கு இடையூறாக எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர இருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளாராம். மேலும் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
