கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தனது மனைவியை ரகசியமாக வீடியோ படம் பிடித்து, ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் கொடுத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூருவின் புட்டேனஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் சையது இனாமுல் (வயது 32) என்பவது மனைவி அவரிடம் பலவகையான தொல்லைகள் ஏற்படுவதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நிச்சயதார்த்தமும், கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி திருமணமும் நடைபெற்றது. திருமணத்தின் போது என் பெற்றோர் 340 கிராம் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வரதட்சணை வழங்கினர். ஆரம்பத்தில் குடும்ப வாழ்வு சீராக இருந்தது. பின்னர் கணவர் சையது இனாமுல் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
வாடகைக்கு எடுத்த விநாயகா நகரில் உள்ள வீட்டின் படுக்கை அறையில், எனக்கே தெரியாமலேயே ரகசியமாக கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்தார். அதில் நாங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் தருணங்களை வீடியோபதிவு செய்து, துபாயில் உள்ள நண்பர் உள்ளிட்ட பலருக்குப் பகிர்ந்துள்ளார்.
மேலும், அந்த நண்பருடன் உல்லாசம் அனுபவிக்குமாறு கட்டாயப்படுத்தி, ஒத்துழைக்காவிட்டால் விவாகரத்து செய்வதாக மிரட்டினார். அவருக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்திருந்ததையும் மறைத்தார். திருமண நாளன்று பிரியாணி பரிமாற்றம் தாமதமானதால், அவரின் உறவினரான அமீன் பேக் தகராறு செய்ததுடன், தற்போது இருவரும் இணைந்து எனக்கு தொல்லை தருகிறார்கள்.
மேலும், எனது கணவர் 19 பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக பலமுறை கூறியுள்ளார். பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு பிளாட் வாங்க நகைகளை கேட்டு மிரட்டியதோடு, அடித்தும் தாக்கியும் வந்துள்ளார். பொது இடங்களிலும் வன்முறையை நிகழ்த்தியுள்ளார். எனவே, அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இப்புகாரை தொடர்ந்து, புட்டேனஹள்ளி போலீசார் சையது இனாமுல் மீது வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதால், அவரை கைது செய்ய வலைவீசி தேடிவருகிறார்கள்.
