நாடுமுழுவதும் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் ராம்லீலா நாடகங்கள் வழக்கம் போல் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில், இலங்கை மன்னர் ராவணனின் அரசவையை சித்தரிக்கும் காட்சி ஒன்றில், நடிகர்கள் பஞ்சாபி பாடலுக்கு நடனமாடும் காணொளி வைரலாகியுள்ளது.
அத்துடன், ராவணனாக நடித்த நடிகர் சிம்மாசனத்தில் அமர்ந்து, இந்த நவீன நடனத்தை பார்வையிட்டு ரசிப்பது போல் காட்டப்படுகிறது. பாரம்பரிய ராம்லீலா நிகழ்ச்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த காட்சி பல சமூக ஊடக பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோ, @jasmeetsingh498 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான லைக்குகளையும், பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் பலர் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஒருவர், “மதம் வெளிப்படையாக கேலி செய்யப்படுகிறது. இது முற்றிலும் சகிக்க முடியாதது” எனக் கடும் விமர்சனம் பதிவு செய்துள்ளார். மற்றொருவர், “இளைய தலைமுறைக்கு நீங்கள் காட்டும் சித்திரம் வெட்கக்கேடானது” என்றும், இன்னொருவர் “இது என்ன முட்டாள்தனம்?” எனக் கோபமாகக் குறிப்பிட்டுள்ளார். பலரும் இந்த நிகழ்வை “கலியுக ராமாயணம்” எனவே இழிவாக சொல்லி வருவதும் கவனிக்கத்தக்கது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்கள் இதுவரை எந்தவிதமான விளக்கமும் வழங்கவில்லை. பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளில் இந்த மாதிரியான மாற்றங்களை கொண்டுவருவது சரியா, தவறா என்பது குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் இன்னும் தொடர்கிறது.
