ஹைதராபாத்தில் பஞ்சகுட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு ஹோட்டலில் நடைபெற்ற டாண்டியா நிகழ்ச்சியில், வேறு சமூகத்தைச் சேர்ந்த 25 வயது பொறியியல் மாணவர் நேஹான் அலி கான் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நண்பர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர், தனது பெயரைக் கேட்ட சிலரிடம் அதைக் கூறியவுடன், அவர்கள் திடீரென அவரைத் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர் காவல் நிலையத்திற்கு தப்பிச் சென்று புகார் அளித்தார்.

இதனையடுத்து, லக்ஷ்மன், தீபக், பரத், சந்திர காந்த் உள்ளிட்டோர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 89(2), 329(4), 115(2) உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை அனுமதிக்க வேண்டாம் என இந்து அமைப்புகள் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தன. ஆதார் அட்டை சரிபார்ப்பு மற்றும் நெற்றியில் திலகம் இடுவது போன்ற நிபந்தனைகளை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையில், பஜ்ரங் தள் அமைப்பினர் சிலரை அடையாளம் கண்டு, அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும், ஆனால் அவர்களே காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.