சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட பரிதாப சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். கூட்டங்களில் குழந்தைகள் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த நிகழ்வில் காவல்துறை தவறாக செயல்பட்டதால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குற்றம்சாட்டினார்.
“தவெக-விற்கு இடம் கொடுப்பது முதல், நேர நிர்ணயத்தில் வரை காவல்துறையின் செயல்களில் குழப்பம் இருந்தது. ஆரம்பத்திலேயே சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்த மரணங்களை தவிர்த்து இருந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளார். மேலும், நிகழ்வுக்கு பின்னால் கூட தமிழக அரசு பொறுப்புடன் செயல்படவில்லை என அவர் விமர்சித்தார்.
“மாநிலத்தில் என்ன நடக்கிறது என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், மத்திய அரசை நோக்கி விரல் சுடுவது தவறு. தமிழகத்தில் நடந்த இந்த கரூர் சம்பவத்தை மறைத்து, துபாயில் சுற்றுலா போன துணை முதல்வர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. பாஜக அமைத்த விசாரணைக் குழு மக்களிடம் உண்மையை பேசிவிடும் என்பதே திமுகவுக்கு பயமாக இருக்கிறது” என்றார். மேலும், “தி.நகர் மேம்பாலத்திற்கு திமுக எம்.எல்.ஏ. அன்பழகனின் பெயரை ஏன் வைத்துள்ளார்கள்?” என்ற கேள்வியும் எழுப்பினார்.
