கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்குட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் உள்ள பிரஸ் லேஅவுட் பகுதியில் வசித்து வந்த தர்மசீலன் (29), மனைவியை கொலை செய்து பின்னர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மசீலன், தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் பின்னலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் மற்றும் மனைவி மஞ்சு (28) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர்.
முன்னதாக துபாயில் பெயிண்டராக வேலை பார்த்த தர்மசீலன், பின்னர் வேலையை விட்டுவிட்டு பெங்களூருவுக்கு திரும்பினார். மனைவியுடன் சேர்ந்து தமிழ்நாட்டுக்குச் சென்ற அவர், மூன்று நாட்களுக்கு முன் மீண்டும் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 28-ம் தேதி இரவு, மனைவி வேலைக்குச் செல்வதை விரும்பாத தர்மசீலன், மது போதையில் மஞ்சுவுடன் தகராறு செய்துள்ளார். தகராறு உச்சத்தை எட்டிய நிலையில், கத்தியால் மனைவியை 8 முறை குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர், வீட்டில் உள்ள மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மஞ்சுவின் தந்தை பெரியசாமி மகளை பார்க்க வீட்டுக்கு வந்தபோது, இந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், கொலை மற்றும் தற்கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இரட்டை மரண சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
