நேபாளம் முழுக்க பெரும் மரியாதை பெற்று வழிபட்டு கொள்ளப்படும் “குமாரி” மரபில், காத்மாண்டுவைச் சேர்ந்த 2 வயது ஆர்யதாரா சாக்யா என்ற சிறுமி புதிய ‘தெய்வமாக’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, நேபாளத்தின் முக்கியமான திருவிழாவான தசரா திருவிழாவின் ஒரு பகுதியாகும். நவீன காலத்தில் கூட தொடரும் இந்த மரபு, உலகத்தில் மிகவும் அபூர்வமான மற்றும் விவாதத்துக்குரிய பாரம்பரியங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
குமாரி எனப்படும் இச்சிறுமிகள் பருவமடையாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை. முன்னாள் குமாரியான 11 வயது திரிஷ்ணா சாக்யா சமீபத்தில் பருவமடைந்ததால், அவருக்குப் பதிலாக ஆர்யதாரா சாக்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மரபுப்படி, சிறுமிகள் ஒருமுறையாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவர்கள் பல்லக்கில் சுமந்து, சிறப்பு பாதுகாப்புடன் அரண்மனையில் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை நடத்துவர். பொதுமக்களிடையே நேரடி தொடர்புகள் இல்லை, ஆண்டில் வெறும் 13 தடவை மட்டுமே கோவிலுக்கு வெளியே வர அனுமதிக்கப்படுவார்.
குமாரியாக தேர்வு செய்யப்படும் சிறுமிகள் பல்வேறு சோதனைகளை கடந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். உடல், மன உறுதி, மற்றும் தைரியம் என அனைத்தும் சோதிக்கப்படுகிறது. இறுதியாக, ஒரு எருமை பலியிடப்படும். அதனைக் கண்டு அஞ்சாமல் இருக்கிறாரா என்பதே முக்கிய சோதனை! அஞ்சாமல் உறுதியாக இருப்பவர் தான் அடுத்த குமாரியாக தேர்வாகிறார் என்பது அந்நாட்டு பாரம்பரியம்.
இந்த மரபு குறித்து பலர் கேள்வி எழுப்பினாலும், நேபாள மக்கள் இதனை தெய்வீக மரபாகவே பின்பற்றுகின்றனர். ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்குகிறது.
ஆனால், “குமாரியாக இருந்தவரை திருமணம் செய்தால் கணவன் விரைவில் இறந்து விடுவார்” என்ற நம்பிக்கையால், பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்வதில்லை.
