சமூக வலைதளங்களில் இளம் தலைமுறையினருக்கு பெரிதும் பிடித்தது இன்ஸ்டாகிராம். தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த செயலியில், குறிப்பாக “ரீல்ஸ்” எனப்படும் ஷார்ட் வீடியோக்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனால், பல இளைஞர்கள் சமைக்க, படிக்க, தூங்க… எதையும் பார்க்காமல், எந்நேரமும் ரீல்ஸ்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்குப் பதிலாக, இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்டை கொண்டு வந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டின் மூலம் இன்ஸ்டாகிராம் செயலியை திறந்தவுடனே, நேராக ரீல்ஸ் பக்கம் தான் முதல் திரையாக தோன்றும். இதுவரை, செயலியை ஒபன் செய்ததும் ஸ்டோரீஸ் பக்கம் முதலில் காணப்படும். பின்னர் ரீல்ஸ் பகுதியில் செல்வதற்காக பயனர்கள் தனியாக கிளிக் செய்ய வேண்டியிருந்தது.
ஆனால் இப்போது, செயலியை திறந்த உடனே ரீல்ஸ் வீடியோக்கள் கண்ணில் பட்டுவிடும் வகையில் அமைப்பை மாற்றி உள்ளது. இது, “பயனர்களை மேலும் ரீல்ஸ் மீது அடிமை ஆக்குவதற்கான திட்டமா?” என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த வசதி தற்போது இந்தியா மற்றும் தென்கொரியாவில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
