கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் குறித்து, கட்சியின் சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளரும், வக்கீலுமான அறிவழகன், சென்னை நீலாங்கரையில்  செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  “கரூரில் நடைபெற்ற பிரசாரத்தின்போது ஏற்பட்ட துயரச்சம்பவம், தலைவர் விஜய்யின் இதயத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களை அன்புடன் நேசிக்கக்கூடியவர் விஜய். இந்த கோரமான நிகழ்வு அவருடைய மனதை ஆழமாக பாதித்திருக்கிறது. அவர் இந்த துயரத்திலிருந்து மீண்டு வரவேண்டும்.”

அடுத்த கட்ட பிரசார நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்: “அடுத்த வாரம் பரப்புரை மேற்கொள்வது குறித்த முடிவு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து, தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார்.” மேலும், போலீசாரின் அனுமதிகள் மற்றும் பாதுகாப்பு நிபந்தனைகள் குறித்து எழுந்த கேள்விகளுக்கும் பதிலளித்த அவர்: “தவெக, காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றியிருக்கிறது. ஒரு நிபந்தனையையும் மீறவில்லை” என்றார்.