மதுரை அருகே செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ராஜராஜேசுவரன் (33), சமயநல்லூர் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாகவே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் மீது அவரது நடத்தை சந்தேகத்துக்கு இடமளித்தது. நேற்று, ஒரு பெண் ஊழியர் கழிவறைக்கு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து ராஜராஜேசுவரனும் செல்ல, அது அந்த பெண்ணின் கவனத்திற்கு வந்தது. பின்னர் அவர், ஜன்னல் வழியாக அவரது வீடியோவை செல்போனில் படம்பிடித்ததை கண்ட அந்த பெண், உடனே கூச்சலிட்டு அலறினார்.
சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் மற்ற பெண் ஊழியர்களிடம் உடனே தகவல் தெரிவித்து, இந்த சம்பவம் மின்வாரிய செயற்பொறியாளர் வரை சென்றது. சந்தேகத்தின்பேரில் செயற்பொறியாளர், ராஜராஜேசுவரனின் செல்போனை கைப்பற்றி பரிசோதித்தபோது, அதில் கழிவறை மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களை ரகசியமாக படம்பிடித்த ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரினர்.
இதையடுத்து, செயற்பொறியாளர் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜராஜேசுவரனை கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது பல்வேறு பெண் ஊழியர்கள் புகார்கள் அளிக்கவும் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது சம்பந்தமாக மின்வாரியத்தில் பரபரப்பு நிலவுகிறது.
