சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

“திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் விவகாரமல்ல.

கட்சியினரின் எண்ணங்களை கட்சி தலைமையிடம் மட்டும் தெரிவிக்க உள்ளேன். முடிவுகள் அனைத்தும் மாநிலம் மற்றும் தேசிய தலைமையினரால் தான் எடுக்கப்படும்,” என அவர் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து, “தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகள் விவாதிக்கப்படும். தவெக  இயக்கத்துடன் கூட்டணி அமைக்கவோ அல்லது அதில் இருந்து விலகவோ எதுவும் பேசப்படவில்லை.

இந்த நிலைமையில் அந்த விஷயத்தையே விவாதிக்க தேவையில்லை. இந்தியா கூட்டணியில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என்றும், அந்த கூட்டணியில் காங்கிரஸ் உறுதியுடன் தொடரும்” என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

மேலும் நடிகர் விஜய் அரசியல் பிரசார அனுமதி பெற்றது தொடர்பாகவும் கருத்து தெரிவித்த செல்வப்பெருந்தகை, “விஜய் சுற்றுப்பயணத்தில் பேசுவதை காவல்துறை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர் என்ன பேசுகிறார் என்பது தெரியவரும்.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அரசு உடனடியாக அனுமதி தருவதில்லை என்பது நிஜம். ஒவ்வொரு போராட்டத்திற்கும் நாங்கள் போராடியே அனுமதி பெற்றுள்ளோம். இதை அரசால் நெருக்கடி அளிக்கப்படுகிறது என கூற முடியாது. அவர்கள் தங்களது கடமைகளை செய்கிறார்கள்” என கூறினார்.