விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப சொத்து பகிர்வு தொடர்பான தகராறில், ஒரு மகன் தனது மாற்றாந் தாயை கொலை செய்து, பிணத்தை கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு (60). விவசாயியான இவர், வெறுத்தாம்பாள் (55), ஜெயக்கொடி (45) ஆகிய இருவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர்களில் வெறுத்தாம்பாள் மூலம் பாலகுரு (28), பிரகாஷ் ராஜ் (25) என்ற இரு மகன்களும், ஜெயக்கொடி மூலம் பூபாலன் (19) மற்றும் 17 வயதுடைய மகளும் உள்ளனர்.
பாலகுரு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும், பிரகாஷ் ராஜ் திண்டிவனம் அருகே சிப்காட்டில் சூப்பர்வைசராகவும் பணியாற்றி வருகின்றனர். பூபாலன் மேல்மலையனூர் அருகே உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு மற்றும் மகள் சென்னையில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், கருத்து வேறுபாட்டால் வெறுத்தாம்பாள் கணவரை பிரிந்து நடுவாநந்தம் கிராமத்தில் மகன்களுடன் வசித்து வந்தார். ஜெயக்கொடி மட்டுமே பழனிவேலுவுடன் துறிஞ்சிப்பூண்டியில் வசித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பழனிவேலு உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜெயக்கொடி தனியாகவே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் முன்பும், எதிரே உள்ள கிணற்றின் அருகிலும் ரத்தக்கறைகள் படிந்திருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது, ஜெயக்கொடியின் கை, கால்கள் கட்டப்பட்டும், தலையில் காயங்களுடனும் சிதைந்த நிலையில் பிணம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ஜெயக்கொடியுக்கும், வெறுத்தாம்பாள் மகனான பிரகாஷ்ராஜுக்கும் இடையே நிலம் தொடர்பான குடும்ப பிரச்சினை இருந்தது தெரியவந்தது. பழனிவேலு பெயரில் இருந்த நிலத்தில் பங்கு கேட்டு, ஜெயக்கொடி மறுத்ததையடுத்து ஏற்பட்ட கோபத்தில், பிரகாஷ்ராஜ் தலையில் கல்லை வீசி, அவரை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பிணத்தை கல்லுடன் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, பிரகாஷ்ராஜ் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக் குற்றம் பதிவு செய்து, இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
