துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மேச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகர் ஜமானின் அவுட் தீர்ப்பு பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பிடித்ததாக நடுவர் அறிவித்தார். ஆனால் அந்த பந்து தரையில் பட்டதா? இல்லையா? என்பது குறித்து குழப்பம் நிலவியது. மூன்றாவது நடுவர் நீண்ட நேரம் வீடியோ காட்சிகளை  பார்த்த பின்னர், ஃபகரை அவுட் என முடிவு செய்தார். இது பாகிஸ்தான் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

“>

 

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், “ஃபகர் அவுட் இல்லை. சந்தேகத்தின் பலனை அவர் (ஃபகர் ஜமான்) பெற வேண்டும். 26 கேமரா இருந்தும் சரியான கோணம் கிடைக்கவில்லை என்பதைக் கூறுவது ஏற்க முடியாது” என்று விமர்சனம் செய்தார்.

“இது மிக முக்கியமான மேச்சு. அங்கிருந்து ஃபகர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பார்” என்றும், “மூன்றாவது நடுவரின் முடிவுகள் விளையாட்டிற்கு ஏற்றதாக இல்லை” என்றும் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.

மேலும், ஃபகர் ஜமானும் அவுட் தீர்ப்பில் அதிருப்தியுடன் பெவிலியனை நோக்கிச் செல்வதுபோல் காணப்பட்டார். அவர் யாரிடமோ கோபமாக எதையாவது சொல்வது போல சைகை செய்ததும், அந்த முடிவை அவர் ஏற்கத் தயங்கியதாக பலர் கூறுகிறார்கள். இந்த சர்ச்சை, இந்தியா – பாகிஸ்தான் போட்டியை மேலும் பரபரப்பாக மாற்றியுள்ளது.