தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை மாவட்டத்தில் தனது மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டார்.

நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை எதிர்த்து விஜய் பரபரப்பாக பேசினார்.

“பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது, 5-10 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி, பேச்சுக்கு கட்டுப்பாடு என்று சிறு சிறு காரணங்களால் தடுக்கிறார்கள். நான் பேசுவது 3 நிமிடங்கள் தான், அதற்கும் தடை விதித்தால் எதைப் பேசுவது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“அரியலூரில் பிரசாரத்திற்கு சென்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருச்சியில் பேசத் தொடங்கியதும் ஸ்பீக்கர் கம்பி அறுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர், பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் இங்கு வந்தால் இப்படி மின்சாரம் துண்டிப்பீர்களா? கம்பி அறுப்பீர்களா? முதலமைச்சர் சார், ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன், முடியுமா? அரசு அடிமட்டம் வரை அதிருமே.

உங்களுக்கு மறைமுக உறவுகள் இருக்கிறது தானே?” என்று விஜய்  விமர்சித்தார். அவரது இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.