பிரபல இந்தி நடிகை திஷா பதானி, நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தில் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரேலியில் அவரது வீட்டு முன்பு, கடந்த 12-ஆம் தேதி அதிகாலையில் ரோஹித் கோதாரா-கோல்டி பரார் கும்பலைச் சேர்ந்த ரவீந்தர் மற்றும் அருண் ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து, ரோஹ்தக் மாவட்டம் கானியைச் சேர்ந்த ரவீந்தர் மற்றும் சோனிபத் இந்தியன் காலனியைச் சேர்ந்த அருண் என அடையாளம் கண்டனர்.

டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா போலீசாருடன் சிறப்பு படையை அமைத்து தேடிய போது, டெல்லி அருகே காசியாபாத் டிரோனிகா நகரில் பதுங்கியிருந்த அவர்களை சுற்றி வளைத்தனர்.

போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், என்கவுண்ட்டரில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், இச் சம்பவத்தில் தொடர்புடைய உத்தரப் பிரதேசம் பாக்பத் பகுதியைச் சேர்ந்த சிறார் இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

முன்னதாக, திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி, இந்து துறவிகளான பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதே காரணமாகவே திஷா பதானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.