உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள ராவத்பூர் பகுதியில் திருட்டு சந்தேகத்தின் பேரில் ஒரு நபர் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்வார்-குர்தா அணிந்து, துப்பட்டாவால் முகத்தை மறைத்திருந்த அந்த நபரை பெண்ணாக நினைத்து கும்பல் சூழ்ந்தது. ஆனால், துப்பட்டாவை அகற்றியபோது, அவர் மீசையுடன் கூடிய ஆண் என்பது தெரியவந்ததும், ஆத்திரமடைந்த கும்பல் அவரை கட்டி வைத்து அடித்து, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. ஆனால், பின்னர் காவல்துறை விசாரணையில் இந்த சம்பவத்தின் உண்மை காரணம் தெரியவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இபெண்ணின் உடையில் இருந்த அந்த நபர் ரவீந்திர குமார் மவுரியா என்பவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. இவர் ஒரு திருடன் இல்லை என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. அவரது மருமகளை ஒரு இளைஞர் தொந்தரவு செய்வதாக சந்தேகித்த அவர், அவரைப் பாதுகாக்கவும், அந்த இளைஞரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் பெண் வேடமிட்டு சென்றிருந்தார். ஆனால், அவரது நடை-உடை சந்தேகத்தை ஏற்படுத்த, கும்பல் அவரை தவறாகப் புரிந்து கொண்டு தாக்கியது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ரவீந்திர குமாரை கும்பலிடமிருந்து மீட்டனர். இதனிடையே, தனது மாமாவை காப்பாற்ற முயன்ற அவரது மருமகளையும் கும்பல் தாக்கியது. காயமடைந்த ரவீந்திர குமார் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். காவல்துறையின் உதவி ஆணையர் கபில்தேவ் சிங், இந்த சம்பவத்தில் சட்டத்தை கையில் எடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.