கேரளாவின் கண்ணூர் மாவட்டம் தர்மடம் நடுவிலத்தரைச் சேர்ந்த ஆயிஷா (41) என்ற பெண், நகை கடை ஊழியர்களை ஏமாற்றி தங்க மாலை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஹி பசிலிக்கா அருகே உள்ள ஜுவல்லரியில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் தங்க மோதிரம் வாங்க வந்ததாகச் சொல்லி நுழைந்தார். அப்போது, மோதிரங்களுடன் மாலைகளையும் காண வேண்டும் என்று கேட்டதால், ஊழியர்கள் மாலைகள் அடங்கிய பெட்டியையும் அவருக்கு முன் வைத்தனர்.
மோதிரம், மாலை ஆகியவற்றை பார்வையிட்ட பிறகு, பிடித்த மாதிரி இல்லை எனக் கூறிய அவர், ஊழியர்கள் அலமாரியில் பொருட்களை திருப்பி வைக்கும் வேளையில், யாரும் கவனிக்காமல் மாலையை திருடிக் கொண்டார்.
ஆயிஷா கவனிக்காத நிலையில் மேலே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா முழு நிகழ்வையும் பதிவு செய்தது. பின்னர் கணக்கில் பிழை இருப்பது கண்டறியப்பட்டதும், சிசிடிவி காட்சிகளை சரிபார்த்த போது திருட்டு அம்பலமானது.
புகாரின் பேரில் மாஹி போலீசார் விசாரணை நடத்தி, கண்ணூரில் இருந்து ஆயிஷாவை கைது செய்தனர். மேலும், அவர் வடகரையில் விற்ற தங்க மாலையையும் போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
