ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹோலகுண்டா மண்டலத்தின் முத்தடா மகி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் திருமணம் ஆகவில்லை என்பதால் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்த திருமண நிறுவனத்தை நம்பி தொடர்பு கொண்டார். ராஜமெண்ட்ரியில் செயல்படும் அந்த திருமண நிறுவனம், “சில நாட்களில் திருமணம் நடக்கச் செய்கிறோம்” என உறுதியளித்து, ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தியது.
அந்த பெண்ணுடன் தொடர்பு வைக்க ஆரம்பித்த கார்த்திக், விரைவில் காதலிலும் விழுந்தார். பின்னர், திருமணத்திற்காக அந்நிறுவனம் ரூ.4 லட்சம் கேட்டதாக அந்த பெண் கூற, கார்த்திக் பணத்தை கட்டிவிட்டார். திருமணம் நடந்து 20 நாட்கள் செம்ம நிம்மதியாக சென்றது. ஒருநாள், மனைவி “நான் ராஜமெண்ட்ரிக்கு சில நாளைக்கு போயிட்டு வருறேன்” என கூறி வெளியேறினார்.
அதன்பின் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அதே போன்று அந்த நிறுவனத்தின் ஊழியர்களையும் தொடர்புக் கொள்ள முடியாத வகையில் அவர்களது மொபைல் எண்கள் அனைத்தும் அணுக முடியாத நிலைக்கு சென்றன. அப்போதுதான் கார்த்திக், தன்னை ஒரு பெரிய திருமண மோசடிக்குள்ளாக்கி விட்டதாக உணர்ந்தார். உடனே அவர் ஹோலகுண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கார்த்திக்கின் புகாரை தொடர்ந்து, போலீசார் அதனை பெரும் மோசடி வழக்காக எடுத்துக்கொண்டு, தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின், கார்த்திக்கிடம் பணம் பெற்ற பெண் மற்றும் அந்த மோசடியில் உடந்தையாக இருந்த இருவரையும் போலீசார் ராஜமெண்ட்ரி பகுதியில் இருந்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி, திருமண நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறது.
