கடந்த ஏப்ரல் 2023இல் நாடு தழுவிய அளவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20)-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைத்து, கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தக் கொள்கை வரவேற்கப்பட்டது. இருப்பினும், இந்த திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், பல நிபுணர்களும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். E20 பெட்ரோல் வாகன மைலேஜைக் குறைக்கும் எனக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மேலும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இரண்டு மகன்கள், இந்தியாவின் முன்னணி எத்தனால் உற்பத்தி நிறுவனங்களை இயக்குவதாக கூறி, தனிநலத்துக்காகத்தான் இந்தத் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து தெளிவுபடுத்திய நிதின் கட்கரி,

“எனது மூளை மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படிப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதையும், நியாயமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதையும் எனக்கு நன்கு தெரியும். எனக்குப் பணப் பற்றாக்குறை இல்லை. எனது சொந்த நலனுக்காக எதையும் செய்வதில்லை” என வலியுறுத்தினார். இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது அவர்,

“துபாயின் சாலைகளை மேம்படுத்த நிதின் கட்கரியை ஆறு மாதங்களுக்கு அனுப்புங்கள் என அந்நாட்டு இளவரசர் பிரதமர் மோடியிடம் கேட்டுள்ளார். அதாவது, இந்திய சாலைகள் தற்போது துபாயை விட சிறந்த தரத்தில் உள்ளன” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. “துபாயை விட இந்திய சாலைகள் சிறந்தவை” என்ற கட்கரியின் கூற்றை பலர் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.