தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காரைக்கால்.

நாளை கனமழை எதிர்பார்க்கப்படும் இடங்கள்: நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால்.

வெப்பநிலை நிலவரம்:

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் சற்று குறைவாகவும், சில இடங்களில் 2-3°C வரை அதிகமாகவும் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை: சுமார் 34°C குறைந்தபட்ச வெப்பநிலை: சுமார் 24-25°C இருக்கக்கூடும்.

மேலும் தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.