பெங்களூருவில் கடந்த  செப்டம்பர் 7 இரவு, ஜக்கூர் இரட்டை சாலை அருகே காயமடைந்த தெரு நாய்க்கு உதவிய 29 வயது வலைத்தள வடிவமைப்பாளரான பெண்ணை, மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சுநாத் என்ற 30 வயது நபர், முதலில் நாயை தூக்கிச் சென்றபோது பெண்ணை தவறாக தொட்டு, பின்னர் சில நிமிடங்களில் திரும்பி வந்து மீண்டும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவர் தப்பியோட முயன்றாலும், பெங்களூரு காவல்துறையினர் அவரை கண்டுபிடித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது ஆண் நண்பரும், அருகில் நின்ற இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும் சேர்ந்து, குற்றவாளியை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தினர். இதில், மஞ்சுநாத்தின் வாகனம் தடுமாறி விழுந்ததால், அவரது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பெண்ணிடம் தெரிவித்தார்.

உடனடியாக 112 அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளப்பட்டு, ஹொய்சாலா காவல் குழு வந்தது, ஆனால் குற்றவாளி தப்பிவிட்டார். பின்னர், பாகலூர் அருகே வாடகை குடியிருப்பில் மஞ்சுநாத்தை காவல்துறை கண்டுபிடித்தது. வேலை இல்லாத பொறியியல் பட்டதாரியான இவர், வெளிநாட்டில் பணிபுரியும் தனது காதலியின் உதவியுடன் வசித்து வந்தார்.

விசாரணையில், விருந்து ஒன்றிலிருந்து திரும்பியபோது மது போதையில் இந்த செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். செப்டம்பர் 12 அன்று, பெண்னை புண்படுத்தும் வகையில் தாக்குதல் செய்ததற்காக பி.என்.எஸ். பிரிவு 74 இன் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டு, மஞ்சுநாத்துக்கு காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.