2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், தனது தேர்தல் பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கிய பிறகு, இன்று அரியலூரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் திரண்ட மக்களுக்கு உரையாற்றினார்.

தமிழ்நாட்டின் வறட்சிக்கான மாவட்டங்களில் அரியலூரும் முக்கியமான ஒன்று எனக் கூறிய அவர், “இந்த மாவட்டத்தை மேம்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். அரசின் புறக்கணிப்பால் இங்கு வாழும் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், அங்கு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அரியலூர் மாவட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் என்றாலும் கூட, “இங்கு போதுமான அளவிலான பேருந்துகள் கூட ஓடுவதில்லை” எனக் கடும் விமர்சனம் செய்தார். பொதுமக்கள் தினசரி பயணத்தில் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றார்.

தன் கட்சி மக்கள் பிரச்சனைகளை நேரடியாக அணுகும் நோக்கத்துடன் செயற்படுவதாகவும், நீண்ட காலமாக இக்கழிக்கப்பட்ட மாவட்டங்களை அரசியலின் மையத்துக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது தான் என்றும் அவர் பேசினார் . விஜயின் இந்த விமர்சனத்திற்கு  அரியலூர் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.