கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள பாலூர் காட்டுவிளை பகுதியில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்து 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

பாலூர் காட்டுவிளைச் சேர்ந்த பெனிட்டா ஜெய அன்னாள் (20) கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு கார்த்திக், மனைவியின் இல்லத்தில் தங்கியிருந்து அருகிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

பெனிட்டா ஜெய அன்னாளுக்கு 40 நாட்கள் முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய கார்த்திக், குழந்தை அசைவற்ற நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மனைவியிடம் கேட்டபோது, குழந்தை தவறி விழுந்ததாக கூறியதையடுத்து, அவர் உடனே குழந்தையை கருங்கலிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, கார்த்திக் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டது.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை இயற்கையாக இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டதென்பது தெரியவந்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் குழந்தையின் தாயை கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், பெனிட்டா ஜெய அன்னாள் குழந்தையைத் தானே கொன்றதாக ஒப்புக்கொண்டார். மேலும், “குழந்தை பிறந்ததிலிருந்து கணவர் என்மீது காட்டிய அன்பு குறைந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சனையும் ஏற்பட்டது. இந்த நிலைக்கு குழந்தையே காரணம் என்று எண்ணி, குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொன்றேன்” என்று பரபரப்பான வாக்குமூலமும் அளித்தார்.

இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் நீதிபதி உத்தரவின் பேரில் பெனிட்டா ஜெய அன்னாள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.