காதல் தோல்வியை தாங்க முடியாமல், கோவில்பட்டியில் ஒரு இளைஞர் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை  சேர்ந்தவர் ரவி பாண்டியன். இவருடைய மகன் சக்தி கணேஷ் (22) கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். சக்தி கணேஷ், அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்தார். ஆனால், அந்த இளம்பெண் சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையால் பாதிக்கப்பட்ட சக்தி கணேஷ், வேலைக்கு செல்வதிலும் ஆர்வம் காட்டாமல், தனிமையில் இருந்துள்ளார். அடிக்கடி மது அருந்தியும் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்தும் உள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளில், நள்ளிரவு 12 மணிக்கு மேல், சக்தி கணேஷ் தனது நண்பரை தொலைபேசியில் அழைத்துள்ளார். நண்பர் அழைப்பை ஏற்காததால், அவர் வாட்ஸ்அப்பில் உருக்கமான ஒரு ஆடியோவைபதிவு செய்து அனுப்பியுள்ளார்.

அதில், “அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம். உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன், முடியவில்லை. எதுவும் நினைத்துக் கொள்ளாதே. எல்லாம் முடிந்துவிட்டது, அவ்வளவுதான். நீ காலையில் போனை எடுத்து பார்க்கும்போது, தனியார் கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் இருப்பேன். என்னை வந்து பார்…” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கோவில்பட்டி அருகே உள்ள பெத்தேல் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற சக்தி கணேஷ், அந்த வழியாக வந்த ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர். மறுநாள் காலை, சக்தி கணேஷின் நண்பர் வாட்ஸ்அப் ஆடியோவை கேட்டதும், அவர் உடனடியாக இதை சக்தியின் பெற்றோரிடம் தெரிவித்தார்.

அவரின் தந்தை மற்றும் குடும்பத்தினர் திக்குமுக்காடி அந்த இடத்துக்குச் சென்று, சிதைந்த நிலையில் உள்ள அவரது உடலை பார்த்ததும், வேதனையில் கதறி அழைத்தனர். இந்த பரிதாபமான சூழ்நிலை, அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து,  விசாரணை நடத்தி வருகின்றனர்.