சென்னையில் ஓடும் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க நகையை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், வேலூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக நிர்வாகியான பாரதி (வயது 56) கைது செய்யப்பட்டார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் நேரடியாக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியாகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியதால், கட்சி தரப்பிலும் அதிர்ச்சி நிலவியது.
இதனை தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டு, “கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால், பாரதியை அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்குகிறோம். மேலும், அவரை நிரந்தரமாக கட்சியிலிருந்து வெளியேற்றுகிறோம்” என்று அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை பாராட்டும் வகையில் கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
